உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

Archive for November, 2009

பாசக்குரல்

Posted by யாதவர் பேரவை on November 20, 2009

அழகிய பனிபடர்ந்த அதிகாலை, தென்றல் தவழ்ந்து வரும் நேரம்..கதிரவன் மேகத்தினுள் நுழைந்து எட்டி எட்டி பார்க்கிறான், அன்பின் ஆணவ வர்க்கமான ஆயர் குடியை.. இரண்டடுக்கு ஓடு பதித்த வீடு, வீட்டின் பின்புறம் அதே அளவில் தொழுவம், அருகில் சேவல் ஒன்று தான் அடைக்க பட்டிருந்த கூட்டின் மீது ஏறி, பொழுது விடிந்ததை கம்பிரமாக ஊருக்கு எடுத்துரைதுவிட்டு, தனது சகாக்களை அழைக்கிறது அன்றைய நாள் விருந்துக்கு கிளம்ப.. வீட்டு பசுக்கள் எல்லாம் இரவு நெடுநேரம் படுத்திருந்த, சோம்பலை மொரிக்க தன் உடலை குவித்து நெளிக்கிறது.. கன்றுகள் வீட்டின் பின்வாசலை நோக்கி கத்துகிறது, கட்ட பட்ட தங்களை அவிழ்த்து விடக்கோரி.. “ஏலம்மா அந்த கன்னுகுட்டிய அவுத்து வுடு’ என்று தொழுவத்தில் வேலையாக இருக்கும் ஆணின் குரல்,எட்டி பார்க்கும் தொலைவில் இருக்கும் சிறிய வீட்டினுள் இருக்கும் தன் மகளை நோக்கி செல்கிறது…

வீட்டினுள் இருந்து சிறுமி ஒருவள் கலைந்த தலையுடன் தூக்கம் கலையாத முகத்துடன் வந்து கன்று குட்டியை அவிழ்த்து விடுகிறாள். அவிழ்த்து விடப்பட்ட கன்றுகுட்டி தன் தாய் பசுவின் மடியை நோக்கி சீறிப் பாய்கிறது.. தாய் பசு பாலை மடுவில் இறக்கும் நேரம் கன்றை இழுத்து தாய் பசுவின் அருகில் கட்டுகிறாள் அச்சிறுமி தன் தந்தையின் கட்டளைக் கிணங்க.. கோபம் கொப்பளித்து கொண்டுவரும் கன்றுக்குட்டியை நாக்கால் நக்கி சாந்தபடுத்திய பின்.. தாய் பசு தன் கன்றுக்குட்டியிடம், ” நீ என் வயிற்றில் இருந்த போது என்னை பேணி வளர்த்தவர்கள் இவர்கள்.. நீ பிறக்கும் சமயம் என்னிலும் மேலாக இவர்கள் தவித்த தவிப்பு சொல்லில் அடங்கா.. நம்மை பேணி வளர்க்கும் இவர்களுக்கு நாம் எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும் என்று கூறி கொண்டவாறு தன் நன்றியை பாலாக வழங்கியது அந்த தாய் பசு..

கன்று தவிக்கும் தவிப்பை பொறுக்க இயலாத அந்த ஆண், தான் கறக்கும் பாலை குறைத்து கொண்டு ஒரு கையில் கறவை பாத்திரத்தை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கன்றுக்குட்டியின் கயிற்று முடிச்சினை அவிழ்க்கிறான், இக்காட்சியினை நித்தமும் காணும் சலிப்போடு பொழுது போகாமல் தன் வீட்டு பின்புற வாசற் படியில் உட்கார்ந்த வண்ணம் ரசித்து கொண்டு இருக்கிறாள் சிறுமி. தாய்ப்பசுவின் மடியில் முட்டி மோதி வயுறு புடைக்க பாலைகுடித்து விட்டு, சற்று எட்டி தொழுவத்திலிருந்து துள்ளி குதித்து வெளியே ஓடி வந்து, அச்சிறுமியின் முன்னால் நின்று பின் மீண்டும் துள்ளிகுதித்து “எங்கே என்னை பிடி பாப்போம் என்கிற தொனியில்’ அச்சிருமியினை விளையாட அழைககிறது.. அருகில் இரவெல்லாம் காவல் காத்து ஓய்வில் படுத்துறங்கும் அவ்வீட்டின் நாயை சிண்டுக்கு இழுக்கும் நோக்கில் அதனை முகர்ந்து பார்க்கிறது… இதையெல்லாம் ரசித்துக்கொண்டு இருக்கும் சிறுமியிடம் “ஏ புள்ள அந்த கன்னுகுட்டிய இழுத்து காட்டுவியா.. வெடிக்க பாத்துகிட்டு இருக்க.. என்று அருகில் காலை பால் வியாபாரத்திற்கு அளவு பாத்திரங்களை அவசரமாக தேய்த்து கழுவி கொண்டு இருக்கும் பெண்மணியின் குரல்.. அதை காதில் வாங்காத வண்ணம் அந்த கன்றுக்குட்டியின் துள்ளலை ரசித்து கொண்டு இருக்கிறாள் அந்த சிறுமி.. சற்று நேரத்தில் “டம்ம” என்ற பயங்கர சத்தம்.. கன்றுகுட்டி, அருகில் தண்ணீர் இருக்கும் பாத்திரத்தினை தள்ளி விட்டு மிரட்சியில் ஒதுங்கி நிற்க..அதை கண்ட சிறுமி ஓடிவந்து கன்றுக்குட்டியின் காலில் எதாவது அடிபட்டுவிட்டதா என்று அதன் காலை தடவி விடுகிறாள்..

“ஏல எவ்ளோ நேரமா தூங்குத, பள்ளிகொடம் போக வேணாமா.. என்று தாயின் கனத்த குரல் கேட்டதும் சற்று அரை கண்ணோடு எட்டி பார்க்கிறான் வீட்டினுள் உறங்கி கிடக்கும் சிறுவன்..வீட்டின் முற்றத்தில் தன் தங்கை சிரித்து சிரித்து கன்றுகுட்டியுடன் விளையாடுவதை பார்க்க தன் கண்களை அகல விரிகிறான்.. தூக்கம் தொலைகிறது.. அருகில் அப்பா வழக்கமாக தன் சட்டையை மாட்டும் ஜன்னல் கதவில் இருந்து சட்டையை எடுத்து போட்டு கொண்டு தன் சைகிளை நகர்த்துகிறார்.. தன் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தவண்ணம் சிறுவன், தன் அப்பாவை நோக்கி, “அப்பா எப்போ வருவே’ என்று கேட்கிறான். வழக்கமாக எங்கே செல்வார் என்று தெரிந்த தொனியில்.. “அப்பா இப்போ வந்துருவேன், நீ எந்துசு காப்பி குடி’ என்று கூறியவாறு சைகிளின் பெடலை அழுத்துகிறார்.. வானொலியில் ஆலோலம் நிகழ்ச்சி முடிந்து செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி என்று காற்றில் அவரது வெண்கலக்குரல் மெல்ல கரைகிறது.. நேரம் செல்கிறது…

சீருடை அணிந்து பள்ளிக்கூடம் செல்ல தயாரான தன் மகளின் தலைமுடியை கருப்பு ரிப்பன் இணைத்து பின்னிக்கொண்டு இருக்கிறாள் அந்த பெண்.. வீட்டின் வாசலில் சைக்கில் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது.. சைகிளின் பின்னால் இருந்த ஒரு பெரிய வைக்கோல் கட்டினை இழுத்து வந்து தொழுவத்திற்கு அருகில் வைத்துவிட்டு, தன் வேட்டியில் உள்ள வைக்கோல் சண்டை உதறுகிறார்.. உள்ளிருந்து தன் மகனின் அழுகை சத்தம், சாப்பாடு இன்றும் சரி இல்லை என்று… தந்தை வந்து தன் மகனை ஆறுதல் படுத்துகிறார்.. கண்டிப்பாக நாளைக்கு இட்லி, தோசை எல்லாம் கிடைக்கும் என்று, உள்ளூர மனதுக்குள் நினைத்து கொள்கிறார் அன்று தன் கையிலிருந்த 50 ரூபாய்க்கும் வைக்கோல் கட்டு வாங்கியாச்சு என்று.

தன் தந்தையின் வார்த்தையை நம்பி, ஒரு சில ரூபாய்க்கு ரேசனில் வாங்கிய அரிசியில் வடித்த முந்தையநாள் கஞ்சியினை அறைவயுதுக்கு சாப்பிட்டு விட்டு, கிழக்குநோக்கி ஆணியில் தொங்கவிடப்பட்ட திருச்செந்தூர் முருகனை வணங்கி நெற்றியில் திருநீறு பூசி, தன் தங்கையின் கையை பிடித்து ஏதோ ஒரு நம்பிக்கையுடன் பள்ளிக்கு நடகலானான் சிறுவன். தந்தை, போன வாரம் பள்ளியில் நடந்த விழாவில் சிறுவன் முதல் மதிபெண் பெற்று பரிசு வாங்கியதையும் சிறுவனின் வகுப்பு ஆசிரியர் தன்னை அழைத்து பாராட்டியதை மனதில் ஓட விட்டு.. “நம்ம புள்ளைங்கள எப்டியாவது நெறைய படிக்க வைக்கணும்…’ என்று மனைவியிடம் கூறிவாறு அவசரமாக தன் அடுத்தவேலையை நோக்கி ” எம்மா மாட்டுக்கு தண்ணி வச்சியா..?’ ” செவல கன்னுகுட்டி வயித்து பூச்சிக்கு மருந்து வாங்கி வச்சேனே அத எடு..? என்று அவரின் பாசக்குரல் காற்றில் தொலைகிறது..

தான், எத்துனை துன்பப்பட்டாலும் தன்னை சுற்றி உள்ள உயிர்களை தன் உயிரைவிட மேலாக பேணும், அவர்களின் ஒருநாள் காலைப்பொழுது மெல்ல மெல்ல நம்மிடையே பின் செல்கிறது..

Posted in New | 5 Comments »